ஜெயலலிதா ஆடியோ! குழப்பத்தில் இருக்கிறாரா செங்கோட்டையன்?

நேற்று கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தான் தனக்கு அரசியல் வாழ்வு தந்தவர்கள். அவர்களுக்கு விசுவாசமாக இருந்து வருகிறேன் என்று சொன்னதோடு, செங்கோட்டையனை ஜெயலலிதா பாராட்டிப் பேசிய ஆடியோ ஒன்றையும் கூட்டட்தில் ஒலிபரப்பினார்.
அதிமுகவினரிடையே ஜெயலலிதாவின் பாராட்டு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை விட்டு வேறு எங்கும் செல்லப்போவதில்லை என்பதைக் குறிப்பிடுவதற்காக இந்த ஆடியோவை ஒலிபரப்பினாரா? அல்லது அதிமுகவின் மூத்த தலைவர் தான் என்பதை நினைவுபடுத்துவதற்காக ஒலிபரப்பினாரா என்று தெரியவில்லை;
இன்னொரு பக்கம் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் சேகர்பாபு ஆகிய இருவரும் செங்கோட்டையனிடம் தொடர்ந்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சேகர்பாபு மிகவும் உரிமையுடன் மாமா என்றே செங்கோட்டையனிடம் பேசுபவராம்.முத்துசாமியும் செங்கோட்டையனுக்கு உறவினர் ஆவார். திமுகவுக்கு வந்தால் உரிய பொறுப்புடன் மரியாதையான இடம் நிச்சயம் என்று இருவரும் உறுதியளித்துள்ளனராம்.
சட்டமன்றத் தேர்தலுக்கு ஒராண்டுக்கு மேல் உள்ள நிலையில், அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம் என்று செங்கோட்டையன் நினைக்கக்கூடும். திமுகவிலிருந்து வரும் தூது சொந்தக்கட்சியினருக்கு தெரிந்திருக்கும் என்பதால் அதிமுகவில் தன்னுடைய பாரமபரியத்தை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தான் கூட்டத்தில் அவ்வாறு பேசியிருக்கிறார் என்று கருதப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதாலும், தன்னுடைய கருத்துக்களை அவர் தொடர்ந்து நிராகரித்து வருவதாலும் சோர்வடைந்துள்ள செங்கோட்டையன் அடுத்து என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளார் என்றே கூறப்படுகிறது