விறுவிறு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வெற்றுபெறும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்க மோதிரம் பரிசு!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதன்படி நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் 1,200 காளைகள் சீறிப்பாய்கின்றன. இதில் 700 மாடுபிடிவீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு பல சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எல்லா வருடமும் இந்த போட்டியில் வழங்கப்பட்டு வரும் பரிசுகள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் வெறும் பாத்திரங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இப்போதெல்லாம், கார், பைக், ஏசி என்று மிகவும் விலை அதிகமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படம் பதித்த ஒரு சவரன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது சுற்று முடிவடைந்து தற்போது மூன்றாவது சுற்று நடைபெற்று வருகிறது. இரண்டாவது சுற்றில் அதிக காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். மூன்றாவது சுற்றில் சாம்பல் நிற சீருடையுடன் 50 வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். தற்போது வரை 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சிவகங்கையை சேர்ந்த அபிசித்தர் 8 காளைகளை அடக்கி முன்னிலை வகிக்கிறார்.