இன்னும் 2 நாட்கள் தான் டைம்.. தமிழ்நாட்டில் விறுவிறுப்படையும் வேட்பு மனு தாக்கல்

 
Nomination

வேட்புமனு தாக்கதல் செய்ய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். மற்ற தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். இதையடுத்து தமிழ்நாடு நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

election-parliment

7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின்போது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 20-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வேலை நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டும் பெறப்படும்.

கடந்த வாரம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு போன்றவற்றில் மும்முரமாக இருந்ததால், ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 27-ம் தேதி ஆகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கி உள்ளனர்.

VCK

அந்த வகையில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

அதே போல், திருவண்ணாமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கலியபெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார். தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து  பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய  அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகிறார்கள்.

From around the web