இது அப்பா மகன் காலம் போல... வைகோவுக்கு நெருக்கடி தரும் துரை வைகோ?

 
Vaiko Durai Vaiko

பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா மகனுக்கு இடையேயான போட்டி முற்றிப் போய் உள்ள நிலையில் அதே போல் ஒரு நிலையை நோக்கி மதிமுகவும் செல்லத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

திமுகவிலிருந்து திராவிடக் கொள்கைப் பற்று கொண்ட பெரும் பட்டாளத்துடன் சென்று மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996ம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட வைகோ ஆட்சியை பிடித்துவிடுவார் என்றெல்லாம் கூட கணிக்கப்பட்டது.

திமுக - தமாகா கூட்டணியுடன் ரஜினி ஆதரவும் கிடைக்க 4வது தடவையாக  ஆட்சியில் மீண்டும் அமர்ந்தார் கலைஞர். அந்தத் தேர்தலுடன் வைகோவின் வேகமும் குறைந்து விட்டது. பின்னர் கலைஞருடனும் ஜெயலலிதாவுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை இழந்து விட்டார். மக்கள் நலக் கூட்டணி அமைத்து விஜயகாந்த் ஐ முதல்வர் வேட்பாளராக அறிவித்த போது பெரும் அரசியல் வீழ்ச்சியைக் கண்டார். மக்கள் நலக் கூட்டணியும் சுருண்டு விட்டது. மதிமுகவும் சுருங்கிப் போய்விட்டது.

தனிக்கட்சி கண்ட வைகோவின் மதிமுகவில் புதிய இளைஞர்கள் யாரும் வந்து சேரவில்லை என்பதால் நாள்பட நாள்பட கட்சியும் தேய்ந்து கொண்டே போனது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வீறுகொண்டு எழுந்த நிலையில், திராவிடக் கொள்கைகளைக் காப்பாற்றுவதற்காக எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் திமுகவுக்கு துணையாக மதிமுக இருக்கும் என்று கூறி திமுக அணியில் இணைந்தார்.

மதிமுக சார்பில் கணேசமூர்த்தி ஈரோடு எம்.பி.ஆனார். வைகோவும் மாநிலங்களவை உறுப்பினராக 6 ஆண்டுகள் மீண்டும் பாராளுமன்றத்தில் முழங்கினார். எல்லாம் சரியாகப் போயிருந்து இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்து இருந்தால் வைகோ ஏதோ ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ அல்லது துணை குடியரசுத் தலைவராகவோ போயிருப்பார். திமுகவுடன்  மதிமுக இரண்டற கலந்து இருக்கும்.

ஆனால் வாரிசு அரசியலை எதிர்த்து தனிக்கட்சி கண்ட வைகோ, அரசியல் தொடர்பே இல்லாமல் சிகரெட் ஏஜென்ஸி நடட்தி வந்த தன்னுடைய மகனுக்காக உடன் பயணித்த  கணேசமூர்த்தி எம்.பி.ஐ கழட்டி விட்டார். துவண்டுபோன கணேசமூர்த்தி மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

மகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பாததால், திமுக தலைமையிடம் பேசி தீப்பெட்டி சின்னம் பெற்று தேர்ந்தலை சந்தித்தார். கே.என்.நேரு, அன்பில் பொய்யாமொழியின் தயவால் தொகுதிக்கு எந்த சம்மந்தமும் இல்லாவிட்டாலும் திருச்சி எம்.பி ஆகிவிட்டார் மகன் துரை வைகோ.

பாஜக ஆசை காட்டியதோ, மிரட்டிப்பார்த்ததோ தெரியவில்லை மகன் துரை வைகோ திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தொடங்கி விட்டார். பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலினை பரதன் என்றும் வைகோவை ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றவர் என்றும் பேசியதைக் கேட்டு பொங்கிவிட்டார் முதலமைச்சர். மதிமுகவிலிருந்து தாய்க்கட்சிக்கு வர விரும்பியவர்களை தடுத்து வைத்திருந்தவர் பச்சைக்கொடி காட்டி அறிவாலயத்திற்கு அழைத்து தன் கையால் சால்வை அணிவித்து கட்சியில் இணைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால் கட்சித்தாவல் சட்டத்தில் பதவி பறிபோகாது என்பதால் ஒன்றிய இணையமைச்சர் பதவி கேட்கிறாராம் துரை வைகோ. இப்படி ஒரு செய்தியை பாஜகவே பரப்பி விடுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் வைகோ கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பது பொதுக்குழு கூட்டத்தில் தெரிந்தது.

மகனுக்கு பதவி கிடைப்பதற்காக பாஜகவுடன் சமரசம் செய்வாரா அல்லது முதலமைச்சர் பக்கம் இருந்து கொண்டு மகனை மட்டும் பாஜகவிடம் அனுப்புவாரா என்று தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி போல் மதிமுக இரண்டாக உடையும் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. துரை வைகோவைப் பிடிக்காதவர்கள் நேரடியாக திமுகவில் ஐக்கியமாகிவிடுவார்கள். துரை வைகோ வுக்கு வேண்டியவர்கள் அந்தக் கட்சியில் இருப்பார்கள் அவ்வளவு தான்.

ஆனால் புதிய உறுப்பினர்கள் இல்லாமல் மதிமுகவும் குறிப்பிட்ட ஒரு சாதிக்கான கட்சியாக சுருங்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே வாக்கு வங்கிக்குப் போட்டியாக தேமுதிகவும் இருப்பதையும் மறந்து விட முடியாது. மதிமுகவை கரைத்து விட்டு, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் வாய்ப்பும் திமுகவுக்கு உள்ளது.

என்ன செய்யப் போகிறார் வைகோ.. மகனுக்காக கொள்கைகளை சமரசம் செய்து கொள்வாரா? அல்லது கொள்கைக்காக மகனை தியாகம் செய்வாரா?  பொறுத்திருந்து பார்க்கலாம்..

-ஸ்கார்ப்பியன்

From around the web