அரசியலில் ஆதரவற்றவர் என்றால் இது தானோ? முன்னாள் முதலமைச்சருக்கா இந்தக் கதி?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்து, ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் தற்காலிக முதலமைச்சராக வலம் வந்த ஓபிஎஸ் என அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார்.
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்பதைப் போல், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும் எட்டிப்பார்க்காமல் இருந்து விட்டு , ஜெயலலிதா மறைந்ததும் ஓடோடி வந்து ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி. அப்போதே அதிமுகவை கூறு போட்டு பாஜகவை அந்த இடத்திற்கு கொண்டு வரும் திட்டமும் தயார் ஆகிவிட்டது என்றே கூறலாம்.
ஏதோ தனக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாக நினைத்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பாஜக வலையில் சிக்கிவிட்டார். இதைத் தெரிந்து தான் சசிகலா அவரை மாற்றி விட்டுகொங்குப் பகுதியைச் சார்ந்த செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கத் திட்டம் போட்டார். செங்கோட்டையனிடம் அப்போதைய தேவைக்கேற்ற வைட்டமின் சக்தி இல்லாதால் அந்த இடத்திற்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.
ஆடிட்டர் குருமூர்த்தி சொன்னது போல் தர்மயுத்தம் தொடங்கி சசிகலாவை எதிர்த்தார் ஓபிஎஸ். இந்த தர்மயுத்தம் தொடங்காமல் இருந்திருந்தால் நாவலர் நெடுஞ்செழியன் போல் வாழ்நாள் முழுவதும் அதிமுகவில் இரண்டாம் இடம் ஓபிஎஸ்-க்கு நிரந்தரமாக ஒரு வாய்ப்பு இருந்தது. கட்சியை உடைத்தார்.
இன்னொரு பக்கம் சசிகலா ஆதரவால் வந்த எடப்பாடி பழனிசாமி அவரை ஒதுக்கிவிட்டு நேரடியாக பாஜகவிடம் தஞ்சமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சசிகலா, தினகரன் தலைமையில் கட்சியை மற்றொரு பிரிவாக உடைத்தார். அதிமுகவுக்கு சட்டமன்றத்தில் உரிய பெரும்பான்மை இல்லை. ஓ.பி.எஸ் ஐ இணைத்துக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார் எடப்பாடி. இரட்டைக் குழல் ஒன்றாக ஊதும். ஆனால் இரட்டைத் தலைமை எத்தனை நாட்கள் சேர்ந்திருக்க முடியும்.
ஓபிஎஸ் ஐ விரட்டினார் எடப்பாடி பழனிசாமி. பலம் இருப்பவர்களுக்குத் தானே மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். பாஜகவுடன் எடப்பாடி தலைமையிலான அதிமுக சேராத நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டு 2024 தேர்தலில் போட்டியிட்டது பாஜக. தேர்தல் முடிவு என்னவோ 0 தான்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி போட்டுள்ளது பாஜக. ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்கள் கூட்டணியில் இல்லை என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு அரசுப் பயணமாக வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் வாய்ப்பு எடப்பாடி அணியினருக்கு கிடைத்தது. தனியாக சந்திப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சேலம் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் விமான நிலையத்தில் வரவேற்பு அளிப்பதற்கு கூட ஓ.பி.எஸ் க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் கட்சியுடன் ஓபிஎஸ் கூட்டணிப் போடப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. விஜயகாந்த் அன்றைய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இணைத்தது போல் விஜய் கட்சியில் ஓபிஎஸ் ஐ சேர்த்துக் கொள்வாரா விஜய் அல்லது வெறும் தேர்தல் கூட்டணி தானா என்று தெரியவில்லை.
யாராவது தன்னை அழைக்கமாட்டார்களா என்ற தவிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
தவளை தன் வாயால் கெடும் என்று சொல்வார்கள். அரசியல்வாதிகள் தங்களுடைய பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் எடுக்கும் ஒரு சில நடவடிக்கைகளால் தங்கள் அரசிய்ல் எதிர்காலத்தையே தொலைத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்!
-ஸ்கார்ப்பியன்
