அதிமுக - தவெக கூட்டணி கிடையாதா? அதிர்ச்சியூட்டும் தவெக!

அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் விஜய் யின் தவெக கூட்டணியில் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக என நான்கு அணிகளாக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. பாஜகவும் பாமகவும் அதிமுகவுக்குத் திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாதக தனித்துப் போட்டியிட்டு திமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் வழக்கமான அரசியலைத் தான் செய்யும் என்றே தெரிகிறது. விஜய் கட்சி தனித்து போட்டியிட்டு தங்களுடைய பலத்தை நிருபிக்குமா அல்லது அதிமுக அமைக்கும் கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்வி தான் பிரதானமாக இருக்கிறது. விசிக வை தங்கள் பக்கம் இழுக்க விஜய் இன்னும் முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவுடன் சேருவதில் விஜய்க்கு இரண்டு சவால்கள் உள்ளது.
அதிமுகவுக்குத் தான் கூடுதல் இடம் ஒதுக்கப்படும். முதலமைச்சர் வேட்பாளரும் எடப்பாடி பழனிசாமி என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த இரண்டும் விஜய்க்கு நெருடலான விஷயங்களாகும். எனவே தன்னுடைய தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதில் விஜய் ஆர்வமாக உள்ளதாகத் தெரிகிறது.
”2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்றும், விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. உட்கட்டமைப்பு பணிகள் முடிந்ததும் தேர்தலுக்கான பணி தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது”
விஜய் கட்சியுடன் அதிமுக பேச்சுவார்த்தை என்ற செய்திகளை மறுக்கும் வகையில் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் தான் விஜய் கட்சியை கூட்டணியில் சேர்த்துவிட ஆர்வமாக இருப்பதாகவும், விஜய் அது குறித்து பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.