ஒன்றிய அமைச்சர் என்ன மன்னரா? ஆவேசப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
stalin

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கிய முதல் நாளில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்காத ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர்களையும், தமிழ்நாட்டு மக்களையும் அவதூறாகப் பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இதற்கு பாராளுமன்றத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் கனிமொழி எம்.பி. மேலும் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் தன்னை வந்து சந்தித்த போது  புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டதாகவும் பழி சுமத்தியுள்ளார் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இதையும் மறுத்துள்ளார் கனிமொழி எம்.பி. புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கையை தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாகவே சொல்லிவிட்டோம் என்பதையும் நினைவுபடுத்தினார்.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சரின் பாராளுமன்றப் பேச்சைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் கடும் ஆவேசத்துடன் ஒன்றிய அமைச்சரின் கடித்ததை சாட்சியாக் இணைத்து பதிலடி கொடுத்துள்ளார்.

“தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிஅவர்கள் இதனை ஏற்கிறாரா?

NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய PM SHRI MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே? பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!!

நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்