சி வோட்டர் கருத்துக் கணிப்பு ஒரு சீட்டிங்? கணக்கிலே தமாஷ் பண்ணுறாங்களே!!

 
TN Chief Minister Aspirants

சி வோட்டர் என்ற நிறுவனம் அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டு வருகிறது. நேற்று முந்தைய நாள் திமுகவுக்கு தவெகவும் தான் போட்டி என்று நடிகர் விஜய்  முழங்கினார். அடுத்த நாளே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முதல் இடத்தையும் நடிகர் விஜய் க்கு இரண்டாம் இடத்தையும் வழங்கி சி.வோட்டர் கருத்துக் கணிப்பு வெளிவருகிறது. இதெல்லாம் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரம் போன்ற செட்டிங் தானா? என்று சாமானிய மக்கள் கூட கேள்வி எழுப்புகிறார்கள்

மார்ச் மாத தொடக்கத்தில் வெளியான Political Pulse கருத்துகணிப்பில் 2026ம் ஆண்டு தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு 59.5% ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பெண்கள், மாணவர்களுக்கு என்று முதலமைச்சர் கொண்டு வந்த திட்டத்தால் ஒட்டுமொத்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாக்குகள் திமுகவுக்கு ஆதரவாக இருப்பது வெட்ட வெளிச்சம்.

இந்நிலையில் சி வோட்டர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெறும் 27 சதவீதம் மட்டுமே ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளது அந்தக் கருத்துக் கணிப்பு வெறும் கருத்துத் திணிப்பு என்று சமூகத்தளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இரண்டாம் இடத்தில் விஜய்க்கு ஆதரவாக 18 சதவீதம் என்பது ஆச்சரியம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீதம் அண்ணாமலைக்கு 9 சதவீதம் என அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது சி வோட்டர் நிறுவனம் .

சரி என்றே எடுத்துக் கொண்டாலும் மீதம் உள்ள 36 சதவீதம் யாருக்கு கிடைத்துள்ளது என்ற விவரமே இல்லையே? சீமான், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், செல்வப்பெருந்தகை என தமிழ்நாட்டு அரசியல் கட்சிதலைவர்கள் தலா  ஒரு சதவீதம் என்று பிரித்துக் கொடுத்தார்களா? மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் யார் பெயரெல்லாம் இடம்பெற்றிருந்தது என்ற விளக்கம் கூட இல்லையே.

கருத்துத் திணிப்பெல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது என்று சி வோட்டர் நிறுவனத்திற்கு அதன் பின்னால் உள்ளவர்களுக்கும் தெரியாமல் போனது ஒன்றும் ஆச்சரியமில்லை தான்!