ஆட்சியில் பங்கு கேட்கிறதா காங்கிரஸ் கட்சி? திமுக கூட்டணிக்கு சிக்கலா?

 
Selvaperunthagai Selvaperunthagai

திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு கட்சிகள் வரும் என்று பல மாதங்களாகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். திமுக கூட்டணியில் குழப்பம் ஏதும் ஏற்பட்டு விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு அதிமுக அணிக்கு இருக்கிறது.

ஆட்சியில் பங்கு என்று நடிகர் விஜய் அறிவித்த பிறகு இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் இதில் என்ன தவறு, கேரளா போல் தமிழ்நாட்டிலும் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது என்ற ரீதியில் பேசி வருகின்றனர். அதிமுக முகாமில் பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சி தான் என்று உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையின் பேட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.இரட்டை மலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு, கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை,

”பாஜக தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கிறது. சமக்ரசிக்ஷா நிதி, ஜிஎஸ்டி நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதை பழனி சாமி மத்திய பாஜக அரசிடம் கேட்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது, நீட்டை தமிழகத்துக்குள் நுழைய விட மாட்டேன். ஜிஎஸ்டி திட்டத்தில் கையெழுத்து போட மாட்டேன். உதய் மின் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்றார்.இவை எல்லாம் யார் ஆட்சியில் இருக்கும்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

கில இந்திய காங்கிரஸ் என்ன வழி காட்டுகிறதோ அதன்படி ஒரு மாநிலத் தலைவராக நான் நடந்து கொள்வேன். தமிழகத்தில் இத்தனை தொகுதிகளை கேளுங்கள், அமைச்சரவையில் பங்கு கேளுங்கள் என்று காங்கிரஸ் தலைமையில் இருந்து எனக்கு எந்த அழுத்தமும் வரவில்லை,” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிப்பதோடு, திமுகவுக்கு எந்த அழுத்தமும் தருவதற்கும் வாய்ப்பு இல்லை என்பதை செல்வப் பெருந்தகையும் தெளிவு படுத்தியுள்ளார்.

 

 

From around the web