41 வயது வரை அறிவும் தெளிவும் இல்லாதவரா சீமான்? சு.ப.வீரபாண்டியன் காட்டம்!!

ஆடிட்டர் குருமூர்த்தி பரிந்துரையில் சிவந்தி ஆதித்தனாரிடமிருந்து நாம் தமிழர் கட்சியை பெற்ற சீமான், 41 வயது வரையிலும் அறிவும் தெளிவும் இல்லாமல் தான் இருந்துள்ளார் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சு.ப.வீரபாண்டியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சுப.வீரபாண்டியன் அறிக்கை விவரம் வருமாறு,
"தந்தை பெரியார் குறித்து தரக்குறைவான விமர்சனங்களையும், ஆதாரம் இல்லாத அவதூறுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார் சீமான்! இதனை ஒரு மனநோயாளியின் உளறல் என்றோ, மலிவான விளம்பரத்திற்காகப் பேசப்படும் பேச்சு என்றோ கருதி ஒதுக்கி விடக்கூடாது! இதற்குப் பின்னால் திட்டமிட்ட, கலவரத்தைத் தூண்டக்கூடிய ஆர் எஸ் எஸ் அமைப்பின் சதி இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
பேசப்பட வேண்டிய செய்திகள் நாட்டில் எவ்வளவோ இருக்க, எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பெரியாரை அடித்து நொறுக்குவதும், திராவிடத்தை முடித்துக் கட்டுவதும்தான் என் வேலை என்று, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது சீமான் திடீரென்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். எதனால் இப்படி ஒரு நிலைப்பாட்டினைச் சீமான் எடுத்துள்ளார் என்று எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு அவர் ஒரு விடை சொல்கிறார் .....
2008 ஆம் ஆண்டு அண்ணனை (பிரபாகரன்) ப் பார்க்கும் வரையில், நானும் இந்தக் கூட்டத்தில்தான் இருந்தேன். அவரைப் பார்த்ததற்குப் பின்னால், எனக்கு உண்மைகள் தெரிந்து விட்டன. நான் பெரியாரைப் போற்றியதெல்லாம், நான் வழி நடந்த பாதை! இப்போது பேசுவதுதான் நான் வழிகாட்டும் பாதை என்கிறார்!
2008 க்குப் பிறகுதான், தனக்கு அறிவும், ஞானமும் வந்தது என்பது போலப் பேசுகிறார். அப்போது அவருக்கு வயது 42. அதாவது 41 வயது வரையில் அறிவும் தெளிவும் இல்லாதவராக அவர் இருந்திருக்கிறார் என்பதை அவர் கூற்று வெளிப்படுத்துகிறது.
போகட்டும், 2008 இல் எல்லா ஞானமும் வந்துவிட்டது அல்லவா....! பெரியார் இனத் துரோகி என்பதும் புரிந்து விட்டது அல்லவா....! பிறகு ஏன் அதற்குப் பிறகும் பெரியாரின் நினைவைப் போற்றிச் சுவரொட்டிகள் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டன? எதற்காகக் கட்சி வெளியிட்ட இன எழுச்சி மாநாட்டு மலரில், தந்தை பெரியாரின் படமும், அவரைப் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றன ? எதற்காகச் சென்னை, எம்ஜிஆர் நகர் மார்க்கெட் தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியாரைப் போற்றிப் புகழ்ந்து சீமான் பேசினார்? எதற்காவது அவர்களிடம் விடை உண்டா?
மேதகு பிரபாகரன், பெரியார் குறித்தும் - திராவிடம் குறித்தும் தவறாகப் பேசினார் என்பது எத்தனை பெரிய பொய், பித்தலாட்டம்! ஒரு நாளும் அவர் அப்படி எந்த ஒரு கருத்தையும் எங்கும் வெளியிட்டதில்லை. எங்கும் வெளியிடாத ஒரு கருத்தையும், பல வரலாற்றுச் செய்திகளையும் வெறும் இரண்டு நிமிடச் சந்திப்பில் அவர் சீமானிடம் சொல்லிவிட்டார் என்பதை விட மோசடி வேறு என்ன இருக்க முடியும்?
எல்லாவற்றிற்குமான விடை, 2019 டிசம்பர் மாதம், முகநூலில் வெளியாகி உள்ள டி. பாலசுப்பிரமணிய ஆதித்தனின் பதிவில் உள்ளது! துக்ளக் ஆசிரியர் சோ, ஆடிட்டர் குருமூர்த்தி இருவரும் ஒருவரைத் தன்னிடம் அழைத்து வந்ததாகவும், நாம் தமிழர் கட்சி என்னும் பெயரை அவருக்குக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும், தன் அண்ணன் சிவந்தி ஆதித்தன் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளியில் அமர்ந்திருந்த அந்த நபர் சீமான், உள்ளே வந்ததும் தன் காலைத் தொட்டுக் கும்பிட்டதாகச் சிவந்தி ஆதித்தன் கூறுகிறார். மேலும், அந்த நபரை, நாடார் சங்க மாநாடுகளில் தான் பார்த்திருக்கிறேன் என்றும் எழுதுகிறார்! இவ்வளவுதான் அந்த நபரின் யோக்கியதை!
ஆக மொத்தம் சோ, குருமூர்த்தி போன்ற யோக்கியர்களால் சிவந்தி ஆதித்தனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, கட்சி தொடங்கிய மாபெரும் தமிழின உணர்வாளர்தான் இந்தச் சீமான்! முதல் கோணல் முற்றும் கோணலாகத்தானே இருக்க முடியும்!
பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டு, பெரியார் மீது பார்ப்பனர்களால் வீசி எறியப்படும் ஒரு சாக்கடைத் தண்ணீர்தான் சீமான் என்பது தெளிவாகப் புரிகிறது! அதனால் தான் ஹெச். ராஜா தொடங்கி, சமூக எதிரிகள் அனைவரும் இன்று சீமானைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அநாகரிகமாகவும், அடாவடித்தனமாகவும் பேசும் ஒரு ஆளைக் களத்தில் இறக்கி விட்டால், அதனால் ஒரு கலவரம் வரக்கூடும். அப்படி ஏற்படும் கலவரத்தில் தாங்கள் குளிர் காயலாம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் சத்தம் போடலாம் என்பதே அவர்களின் ரகசியத் திட்டம் என்பதைத் தமிழர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது!". இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன்.