ஹோட்டல் கடைக்கு ரூ.61 ஆயிரம் மின் கட்டணமா? அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்!

 
Thoothukudi Thoothukudi

தூத்துக்குடி அருகே டீக்கடைக்கு ரூ.61 ஆயிரம் மின் கட்டணம் செலுத்துமாறு பில் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள புத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் திருநெல்வேலி - தூத்துக்குடி 4 வழிச்சாலையில் உள்ள வசவப்பபுரத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் இவர் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த கடையை 2 மின் இணைப்புகளுடன் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் உணவகத்திற்கு மேலும் ஒரு மின் இணைப்பு பெற்று டீக்கடை தனியாக நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த இணைப்புக்கு தனியாக கடந்த 8 மாதங்களாக மின் கட்டணம் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் 2 மின் கட்டணமும், சரியான அளவில் ரூ. 413 மட்டும் கட்டவேண்டும் என்று கூறப்பட்டது. அதை பூபதிராஜா கட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த மாதத்திற்கான கட்டணம் ரூ.40 ஆயிரம் கட்ட வேண்டும் என்று மின் கட்டணம் அளவீடு செய்தவர் கூறிச் சென்றதாக கூறப்படும் நிலையில், அதிர்ச்சி அடைந்த பூபதி ராஜா இதுகுறித்து வல்லநாடு மின்வாரிய அலுவலரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார். 

EB

அதற்கு டெபாசிட் பணத்தை கழித்து நீங்கள் ரூ.26 ஆயிரம் மட்டும் கட்டுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த சூழலில் வேறு வழியின்றி அந்த கட்டணத்தை பூபதிராஜா கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் இந்த மாதத்திற்கு மின்கட்டணம் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர் மின் கட்டணத்தை அளவீடு செய்து இந்த டீ கடைக்கு மட்டும் ரூ.61 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா மீண்டும் வல்லநாட்டில் உள்ள மின் வாரிய அலுவலரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களிடம் கேட்டு சோர்வடைந்த பூபதிராஜா, இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். 

TNEB

இதற்கிடையில் நேற்று (செப். 21) மின்வாரிய ஊழியர் ஒருவர் கடைக்கு வந்த இந்த கட்டணத்தை நீங்கள் கட்டாயம் கட்ட வேண்டும். இல்லை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று எச்சரித்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் முதலில் இருந்த இரண்டு மின் இணைப்புகளுக்கும் 12 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் என மின் கட்டணம் வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த இரண்டு இணைப்புகளில் மட்டும் தான் போர்வெல், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அதிக அளவு மின் எடுக்கும் பொருட்கள் ஓடுகிறது என்றும் புதிய இணைப்பில் 6 மின்விசிறி மற்றும் 6 லைட் மட்டுமே எரிவதாகவும், கடந்த ஆண்டே மீட்டர் வேகமாக ஓடுவதாகவும், இதை உடனே மாற்றித்தர வேண்டும் என்றும் மனு அளித்ததாகவும் பூபதிராஜா தெரிவித்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாத மின்வாரிய ஊழியர்கள் தற்போது ரூ.61 ஆயிரம் ரூபாய் கட்டியே தீர வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் பூபதிராஜா வேதனை தெரிவிக்கிறார். மேலும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். 

From around the web