நம்ம அண்ணாவா? முதல்ல கட்சிப் பெயரை மாத்திட்டு வந்து அண்ணாவை கூப்பிடுங்க விஜய்!!
சனிக்கிழமை க்கு புதிய முக்கியத்துவம் கொடுத்த நடிகர் விஜய் யின் தேர்தல் பிரச்சாரம் திருச்சியில் தொடங்கியுள்ளது. வழக்கம் போல் திருச்சி குலுங்கியது, திருப்பம் தரும் திருச்சி என்றெல்லாம் விஜய் ஆதரவாளர்கள் புளங்காகிதம் அடைந்து பேசி வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக திரையில் மட்டுமே பார்த்து வந்த பிரபல நடிகர் ஒருவர் வீதிக்கு வருகிறார் என்றால் அங்கே ஒரு திருவிழா மன் ஓட்டம் எழுவது இயற்கையானது தானே. இது ஒன்றும் தமிழ்நாட்டிற்குப் புதிது கிடையாது.
சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், கார்த்திக் என முன்னணி நடிகர்களாக இருந்தவர்களில் அரசியல் பிரவேசம் என்னாச்சு? அவர்களுக்கும் இதைப் போல் கூட்டம் சேர்ந்ததை மறந்து விட முடியுமா?. இன்னும் சமீபகாலத்தில் சொல்ல வேண்டும் என்றால் விஜயகாந்த் திற்கு வராத கூட்டமா? மக்கள் நல முன்னணி என்ற கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக களம் கண்டாலும், விஜயகாந்த் தால் ஆட்சியைப் பிடிக்க முடிந்ததா? அவருக்குப் பிறகு மய்யம் கண்ட கமல்ஹாசன் கூட திமுக அணியில் ஐக்கியமாகி தானே நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.
ஆக, கூட்டம் கூட்டுபவர் எல்லாம் தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆக முடியாது என்பது தான் வரலாறு. எம்.ஜி.ஆரை சொல்பவர்கள், பெரியார், அண்ணா, கலைஞருடன் எம்ஜிஆரின் நீண்ட அரசியல் பயணத்தை குறிப்பிட மறந்து விடுவார்கள். ஜெயலலிதாவும் அதிமுகவில் எம்ஜிஆரால் அடையாளம் காட்டப்பட்டு, கட்சியில் முக்கிய பொறுப்புகள் வகித்து நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, கட்சி பிளவுபட்டு தேர்தலில் தோற்ற பிறகே கட்சியை முழுமையாகக் கைப்பற்றினார், ராஜீவ் காந்தியின் அகால மரணத்தின் அனுதாபத்தால் தான் ஜெயலலிதாவிடம் ஆட்சி அதிகாரம் கிடைத்தது என்பதை யாரும் மறந்து விடவும் முடியாது.
என்னதான் டெக்னாலஜி முன்னேற்றம் அடைந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் மரபணுவில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. அனைத்து தரப்பு மக்களும் கல்வியறிவு கூடுதல் சிந்திக்கும் திறன் பெற்றவர்களாகத் ஹ்டான் உருவாகியுள்ளார்கள். தமிழ்ச் சமூகத்தில் கலைஞர்களும் ரசிகர்களும் சங்க காலத்திலிருந்தே இருந்து தான் வருகிறார்கள். தெருக்கூத்து, நாடகம், சினிமா, தொலைக்காட்சி, குறும்படம், யூடியூப் என வடிவங்கள் தான் மாறி வந்துள்ளது.
வெற்றிகரமான நடிகர் விஜய் மக்கள் மத்தியில் வரும் போது இந்தக் கூட்டம் கூட வில்லை என்றால் தான் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். கூட்டம் கூடுவதால் ஆட்சியைப் பிடித்து விடுவார் என்று ஒரு கருத்து கட்டமைக்கப்படும் என்பதையும் நாம் மறுக்க முடியாது. அது தானே அவர்களின் இந்த சனிக்கிழமைப் பயணங்களுக்கான திட்டம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது தானே அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் தந்துள்ள உரிமை. நடிகர் விஜய் யும் தேர்தல் களம் காணட்டும். மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ளட்டும்.
ஆனால் நாம் சொல்ல வேண்டிய முக்கியமான் ஒரு கருத்து இருக்கிறது. கட்சி தொடங்கும் போது பெரியாரை மட்டும் பத்தோடு பதினொன்றாக தலைவர்கள் வரிசையில் வைத்திருந்தார் விஜய். பெரியாரின் பகுத்தறிவுக்கு ஒவ்வொத சில செயல்களையும் மேடையிலேயே செய்தார். கட்சியின் இரண்டாவது மாநாட்டில் அண்ணாவையும் எம்.ஜி.ஆரையும் தன்னுடைய வழிக்காட்டிகள் என்று முன்னெடுத்தார்.இது அப்போதே சர்ச்சையானது. இப்போது ”நம்ம அண்ணா” என்று உரிமை கொண்டாடியுள்ளார் விஜய்.
வாழ்க வசவாளார்கள் என்று ”நம்ம அண்ணா” சொன்னதை பின்பற்றுவோம் என்று ரொம்பவே உரிமை கொண்டாடியுள்ளார் நடிகர் விஜய். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் எந்த ஒரு படத்திலாவது அண்ணாவின் படத்தைக் கூட காட்டியிருப்பாரா விஜய்? தமிழ்நாடு என்ற பெயர் இருக்கும் வரை இந்த் அண்ணா தான் ஆட்சி செய்கிறான் என்று முழங்கியவர் அண்ணா. தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்தாமல் தமிழகம் என்று குறிப்பிட்டு ஆளுநர் ரவி சர்ச்சை கிளப்பினாரல்லவா? ஆளுநர் ஆர்.என்.ரவியின் வழியைப் பின்பற்றித் தானே ”தமிழக வெற்றிக் கழகம்” என்று கட்சியின் பெயரை வைத்துள்ளார்
அண்ணாவின் பெயரை உச்சரிப்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் கட்சியின் பெயரை ”தமிழ்நாடு வெற்றிக் கழகம்”என்று பெயரை மாற்றி விட்டு வாருங்கள் மிஸ்டர்.விஜய். அப்பவும் உங்க கட்சியின் ஆங்கில இனிஷியல் TVK என்று தான் இருக்கும். உண்மையிலேயே அண்ணாவை நீங்கள் மதிப்பவராக இருந்தால் முதலில் இந்தப் பெயர் மாற்றத்தைச் செய்யுங்கள்.
- ஸ்கார்ப்பியன்
