வெடிக்கிறதா மற்றுமொரு மொழிப்போர்? இந்தி எழுத்துக்களை அழிக்கும் திமுகவினர்!!

 
DMK Anti Hindi Agitation

'சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற ஒன்றிய அரசின் கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தாமதம் செய்து வருவதாக சமீபத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்த கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி" என்றார். இல்லையென்றால் நிதி வழங்க சட்டத்தில் இடமில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த மும்மொழிக் கொள்கை மறைமுகமாக இந்தியை திணிக்கும் முயற்சி என திமுகவினர் குற்றம் சாட்டினர்.  தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதியை உடனடியாக வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கும் நிலையில் ஏன் வீணாக அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். மேலும் தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் பெற்றோர்- ஆசிரியர் மாநில மாநாட்டில் பேசிய முதலமைச்சர் 5 ஆயிரம் கோடி என்ன 10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டேன் என்று சூளுரைத்தார். மேலும் ஒன்றிய அரசுக்கு வரி கொடுக்க மாட்டோம் என சொல்வதற்கு ஒரு நொடி போதும். ஆனால் கொடுத்து வாங்குவது தான் கூட்டாட்சி, அரசியலமைப்புச் சட்டம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக, திமுகவின் ஒவ்வொரு அணியினரும் இந்தித்திணிப்புக்கு எதிரான கண்டனக் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக பெயர்ப் பலகையில் உள்ள இந்தி வார்த்தைகளை கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

சென்னை பரங்கிமலை தபால் நிலையம், திருத்தணி, பாளையங்கோட்டை ரயில் நிலைய பெயர் பலகைகளில் உள்ள இந்தி வார்த்தைகளை அழித்தனர்.

From around the web