2 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால நிவாரணம்! பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை!!
![Mk Stalin](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/ab0d94189d49e8ef9a5565af4fe967aa.jpg)
தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பேரழிவு சீரமைப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால நிவாரணாம் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
”தமிழகத்தின் 14 மாவட்டங்களில் பெஞ்சல் புயல் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் 50 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்ததால், வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்கட்டமைப்புகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக ரூ.2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று மாநில அரசு மதிப்பிட்டுள்ளது.அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்பட்ட போதிலும், இந்த பேரழிவின் தாக்கம் மாநிலத்தின் வளங்களை பாதித்துள்ளது. அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசின் குழுவை விரைவில் நியமிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஒன்றியக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில், அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், மேலும் நிதி உதவி அளிக்க பரிசீலிக்குமாறு கோருகிறேன்" என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.