பச்சிளம் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை.. பெற்ற தாயே குழந்தையைக் கொன்று நாடகம் ஆடியது அம்பலம்!

 
cumbum

கம்பத்தில் 25 நாள் பச்சிளம் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (23). கூலித்தொழிலாளியான இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா (19) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினேகாவிற்கு வளைகாப்பு நடத்தி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். கடந்த மாதம் சினேகாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. 

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி பெற்றோர் வேலைக்குச் சென்று விட்ட நிலையில், சினேகா மற்றும் அவரது பாட்டி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது பாட்டி அருகே உள்ள கடைக்கு சென்று விட, தாம் குளிப்பதற்காக சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் சினேகா கூறியுள்ளார்.

baby

இதனை அடுத்து காணாமல் போன குழந்தையை பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில் வீட்டில் இருந்த பால்கேன் ஒன்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாயிடம் நடைபெற்ற விசாரணையில் குழந்தையை தண்ணீரில் மூழ்கவைத்து கொன்றது தாம் தான் என சினேகா ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால் குழந்தையை பராமரிப்பது சிரமமாக உள்ளதாகவும், கணவருக்கு வலிப்பு நோய்க்காக தொடர்ந்து மருத்துவம் பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Cumbum North PS

மருத்துவம் மற்றும் குழந்தையை பராமரிக்கும் செலவால் குடும்பத்தில் வறுமை அதிகளவில் ஏற்படுவதாகவும் தொடர்ந்து குழந்தை வீட்டில் அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்ததாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட தொடர் மனஅழுத்தத்தின் காரணத்தால் குழந்தையை கேனுக்குள் முக்கி சினேகா கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web