தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில்... அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவு

 
Bus

தமிழ்நாட்டில் அனைத்து அரசுப் பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து, பழுதுகளை சரிசெய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்பட்டு வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணித்து வருகிறார்கள். தொழிலாளர்கள், சிறு குறு வியாபாரிகள், மாணவ மாணவிகள், பெண்கள், அலுவல் பணியாளர்கள், நோயாளிகள் என பல தரப்பினர் பேருந்துகளில் சென்று வருகின்றனர். 

இவற்றில் உள்ள பழைய பேருந்துகள் சீரான இடைவெளியில் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கப்படுகிறது. ஆனால், ஆயுட்காலம் முடிவடைந்த பேருந்துகளையும் இயக்கி வருவதாகவும், இதனால் பேருந்தை ஓட்டுவதற்கும் ஓட்டுநர்கள் சிரமப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Bus

இதனிடையே, விருதுநகர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்து படிக்கட்டு உடைந்து விழுந்த சம்பவம், திருச்சியில் நடத்துநர் இருக்கை திடீரென உடைந்த சம்பவம் என அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் சேதம் குறித்து செய்திகள் வெளியானது. இந்த நிலையில், போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில், அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Bus

இதனைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் பேருந்துகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை செயலாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

From around the web