அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப். 17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, சென்னை உள்பட தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களில் நேற்று மாலை முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.