வெறும் 34 மாசத்தில்.. நெல்லையில் குழந்தை பெற்ற 1,448 சிறுமிகள்.. வெளியான அதிர்ச்சி தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட 1,448 பேர் குழந்தை பெற்றெடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1,448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்ற நலவாழ்வு செயல்பாட்டாளர் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி பெற்ற விவரங்களில், நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் மாதம் வரையிலான 34 மாதங்களில் 1,448 குழந்தை மகப்பேறுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றில் மிக அதிகமாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 347 குழந்தை மகப்பேறுகளும், மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மானூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் முறையே 88, 44 குழந்தை மகப்பேறுகளும் நடைபெற்றுள்ளன என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
குழந்தைகளே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நிச்சயமாக அதிர்ச்சியளிக்கும் ஒன்று தான். இதற்கான பின்னணி என்ன? என்பதை கண்டு பிடித்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமை. நெல்லை மாவட்டத்துடன் ஒப்பிடும் பொது தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், அதன் விளைவாக குழந்தை மகப்பேறுகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள், அதாவது ஆண்டுக்கு 3650 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.