விபத்தில் கால் முறிவுக்கு அட்டைப்பெட்டியை வைத்து கட்டு போட்ட அவலம்.. கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி!

 
Krishnagiri

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் கால்கள் முறிந்த நோயாளிகளுக்கு அட்டைப் பெட்டிகளை வைத்து மருத்துவர்கள் வைத்தியம் பார்த்த அவலம் அறங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம் பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  இருசக்கர வாகனத்தில் பயணித்த ஊத்தங்கரை அடுத்த நாட்டான்கொட்டாய் பகுதியை சேர்ந்த மீனா (45), வேம்பரசன் (24), பரிமளா (21) மற்றும் வெப்பலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (28) ஆகிய 4 பேருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

accident

அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கால்கள் உடைந்த நிலையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது முறிந்த கால்களுக்கு அட்டை பெட்டிகளை வைத்து வைத்தியம் பார்த்த அவலம் அரங்கேறியுள்ளது.

விபத்துக்குள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ரத்தம் கசிந்து அட்டைப்பெட்டிகள் சேதம் அடைந்து, மேலும் காயத்தை பெரிதாக்கும் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web