விண்வெளி ஆராய்ச்சி மேம்பாடா? குடும்ப வருமானமா? - முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் கேள்வி!!

 
ttv dhinakaran ttv dhinakaran

தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை - விண்வெளி ஆராய்ச்சியை மேம்படுத்தவா?  அல்லது முதலமைச்சர் குடும்பத்தின் வருமானத்தை பெருக்கவா ? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை -2025 மீது பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத திமுக அரசு, முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கிய பின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகளும், உருவாகும் என சொல்லப்பட்ட வேலைவாய்ப்புகளும் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில் முதலமைச்சரின் குடும்பத்தைச் சார்ந்த தனி நபர் ஒருவருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் என தமிழகத்தில் அடியோடு சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், குடும்பத்தினருக்காக மட்டுமே அமைச்சரவையை கூட்டி விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருக்கும் முதலமைச்சருக்கும் திமுக ஆட்சிக்கும் அடுத்து வரும் தேர்தலில் தமிழக மக்கள் முடிவுரை எழுதப்போவது உறுதி என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது" என்று டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

From around the web