நெல்லை மாவட்ட மக்களுக்கு முக்கிய செய்தி.. ₹6,000 நிவாரண நிதி டோக்கன் விநியோகம்!
கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரண நிதி வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி நெல்லையில் கனமழை மற்றும் வெள்ளப்பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு நபரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 67 மாடுகள் உயிரிழந்துள்ளது ஒரு மாட்டிற்கு தலா 37,500 ரூபாய் நிவாரணம் என்ற வகையில் மொத்தமாக 25,12,500 ரூபாய் இழப்பீடாக ஒதுக்கப்பட்டுள்ளது.
1,064 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. ஒரு வீட்டிற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்ற வகையில் 1.06 கோடி ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. 504 ஆடுகள் உயிரிழந்த நிலையில் ஒரு ஆட்டுக்கு தலா 4,000 ரூபாய் என்ற வகையில் 20.16 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கன்று குட்டிகள் 135 உயிரிலிருந்த நிலையில் ஒரு கன்று குட்டிக்கு தலா 20,000 ரூபாய் நிவாரணம் என்ற வகையில், 27 லட்சம் ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
28,392 கோழிகள் உயிரிழந்த நிலையில் ஒரு கோழிக்கு 100 ரூபாய் என்ற வகையில் 28.39 லட்சம் ரூபாய் இழப்பீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியாக மொத்த கணக்கீட்டின்படி 2 கோடியே 87 லட்சத்து 7ஆயிரத்து 700 ரூபாய் முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரால் 21 நபர்களுக்கு 58 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளான வட்டங்களில் மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட இருக்கிறது. நெல்லை, சேரமான் தேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய வட்டங்களில் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட இருக்கும் நிலையில், ரேஷன் அட்டைகளுக்கு ரூபாய் 6,000 வழங்கும் பணிக்கான டோக்கன்கள் தற்பொழுது விநியோகிக்கப்பட்டு வருகிறது.