விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம்.. வடமாநில இளைஞர் கைது.. சென்னையில் பரபரப்பு

 
Avadi

ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆவடியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், கிளார்க் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வர்கள் வருகை தந்தனர். தேர்வு எழுத வந்தவர்களில் ஹால்டிக்கெட்டை தேர்வு மைய அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

Exam

அப்போது, மகேந்திர பிரபு என்ற நபரின் ஹால்டிக்கெட்டில் இருந்த புகைப்படமும், தேர்வு எழுத வந்த நபரின் உருவமும் வித்தியாசமாக இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விமானப்படை அதிகாரிகள் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பிரபு என்பவருக்கு பதிலாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுஷில் என்பவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைத்தால் ரூ.3 லட்சம் தர வேண்டும் என பேரம் பேசி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

Muthapudupet PS

இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட சுஷிலை முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விமானப்படையின் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web