என்னை மன்னித்து விடுங்கள்.. கலங்கடிக்கும் திருடனின் கடிதம்.. நேர்மை பற்றி பேசும் தூத்துக்குடி மக்கள்!

 
Megnanapuram

திருச்செந்தூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தப்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திரை செல்வின் (79). இவரும், இவரது மனைவியும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள். இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் வசித்து வரும் மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கடந்த மாதம் 17-ம் தேதி கணவனும், மனைவியும் சென்னைக்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டை பராமரிப்பதற்காக செல்வி என்ற பெண்ணிடம் வீட்டு சாவியை கொடுத்து பராமரித்து பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வந்த பராமரிப்பு பெண் செல்வி, வீட்டின் கதவுகள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Megnanapuram

உடனே வீட்டு உரிமையாளர் சித்திரை செல்வினுக்கும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சித்திரை செல்வினை தொடர்பு கொண்டு, பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் பண, நகை விவரங்களை கேட்டறிந்து சோதனை செய்தனர். 

அப்போது, பீரோவில் வைத்திருந்த ரூபாய் 60 ஆயிரம் ரொக்க பணம், ஒன்றரை சவரன் எடை கொண்ட 2 ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டை உடைத்து கொள்ளையடித்த திருடன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

Megnanapuram PS

அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன்.. என் வீட்டம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. அதனால் திருட்டிட்டேன்” என பச்சை நிற மை பேனாவால் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த கடிதத்தை கைப்பற்றி மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி திருடனை தேடி வருகின்றனர்.

From around the web