போகிறேன் அம்மா.. அரளி விதையை அரைத்துக் குடித்து காவலர் தற்கொலை.. தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம்!

சேலம் அருகே மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு வந்த காவலர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்து மேச்சேரி அருகே உள்ள ஊஞ்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ் (30). இவர் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் காவலராக பணிக்கு சேர்ந்தார். ஆறு மாதத்திற்கு முன்பு பணியில் சேர்ந்த அன்புராஜ் தற்போது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பட்டாலியன் 2ல் வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த அன்புராஜ் கடந்த 31-ம் தேதி முதல் ஒரு மாத மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அன்புராஜ் தனது வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவலர் அன்புராஜ் உடலைக் கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அன்புராஜ், தனது தாயாருக்கு எழுதிய உருக்கமான தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அக்கடிதத்தில், “போகிறேன் அம்மா, இத்தனை நாட்கள் நான் வாழ்ந்தது உனக்காகத்தான். எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இதை யாராவது உன்னிடம் படித்து காட்டுவார்கள். நான் யார்கிட்டயும் சொல்லாமல் போய்விடலாம் என்று தான் நினைத்தேன். அப்புறம் எல்லாம் தப்பா பேசுவாங்க.
என் மனம் அறிந்து நான் யாருக்கும் இதுவரை கெட்டது செய்ததில்லை. என் தலைக்குள் ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு என்னால் அதை கண்ட்ரோல் செய்ய முடியலை. வெளியே எங்கும் போக மாட்டேன். உன்னோட தான் இருப்பேன் அம்மா. அதற்காகத்தான் இங்கு வந்தேன்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அன்புராஜ் குடும்ப பிரச்சினையால் தற்கொலைக்கு செய்து கொண்டரா அல்லது பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணிக்கு சேர்ந்த ஆறு மாதத்தில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.