படிக்காவிட்டால் தான் தீட்டு! விஸ்வகர்மா திட்டத்தை பொளந்த உதயநிதி ஸ்டாலின்!!
விஸ்வகர்மா திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாளும் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளி பழைய மாணவர்கள் விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், அது முதலமைச்சரை உருவாக்கிய பள்ளி பெருமிதம் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தப் பள்ளியில் படித்ததை நினைவு கூர்ந்த உதயநிதி, மகன் தப்பு செய்தால் அப்பாவை பள்ளிக்கு அழைப்பது தான் வழக்கம். ஆனால் இங்கே அப்பா படித்த பள்ளிக்கு மகனாகிய என்னை அழைத்துள்ளீர்கள். கண்டிப்பதற்காக அல்ல கோரிக்கைகளை வைப்பதற்காக என்று பேசியபோது அரங்கம் சிரிப்பலையில் மூழ்கியது.
படித்தால் தீட்டு என்று இருந்த காலத்தில் படிக்காவிட்டால் தான் தீட்டு என்று பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறந்து படிக்க வைத்தவை கிறித்துவ அமைப்புகள். தற்போது மாணவர்கள் கல்வியை நிறுத்துவதற்காக ஒன்றிய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளார்கள். இது குலக்கல்வி திட்டமாகும். இதை ஒரு போதும் தமிழ்நாட்டில் நம்முடைய முதலமைச்சர் அனுமதிக்க மாட்டார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.