டெக்ஸ்டைல் பிசினஸ் செய்தால் கோடிகளில் புரளலாம்.. ரூ.1 கோடி சுருட்டிய நபர் கைது!

 
Tirupattur

வெளிநாட்டில் வேலை பார்த்த உறவினர் மகனிடம் ஆசை வார்த்தை கூறி ரூ.1 கோடி சுருட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்து உள்ள பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பாக்கியராஜிடம் தொழில் ரீதியாக நெருக்கமாக பழகிய முரளிகாந்தி என்பவர் டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் எனக்கூறி மூளைச்சலவை செய்தார். ரூ1. கோடி ரூபாய் முதலீடு செய்தால் சூரத்தில் இருந்து மொத்தமாக ஆடைகளை இறக்குமதி செய்து, நல்ல லாபம் வைத்து மொத்த வியாபாரம் செய்யலாம் என ஆசை காட்டியுள்ளார்.

அதை உண்மை என நம்பிய பாக்கியராஜ் ரூ.79 லட்சத்தை வங்கிக் கணக்கிலும், ரூ.21 லட்சத்தை கையிலும் முரளிகாந்தியிடம் கொடுத்துள்ளார். வெளிநாட்டில் இருந்ததால் சொன்னபடி தொழில் நடக்கிறதா? என பாக்கியராஜால் கவனிக்க முடியவில்லை. 6 மாதங்கள் கடந்து ஊருக்கு திரும்பியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

40-lakh-scam-for-fun

ரூ.1 கோடியை வாங்கிய முரளிகாந்தி, சூரத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்யாமல் பணத்தை ஏப்பம் விட்டிருப்பது தெரியவந்தது. தொழில் எங்கே? நான் போட்ட முதலீடு எங்கே? என கேட்ட பாக்கியராஜை, முரளிகாந்தி அலைய விட்டதாகவும் தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாக்கியராஜ், முரளிகாந்தி மீது நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், முரளிகாந்தியை பிடிப்பதற்குள் அவர் தலைமறைவானார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் முரளிகாந்தி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சூரத் விரைந்த குற்றப்பிரிவு போலீசார் முரளிகாந்தியை கைது செய்து நாட்றம்பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

Police-arrest

அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர், முரளிகாந்தி மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பண மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சந்தியாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சூரத்தில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்து கோடிகளில் லாபம் பார்க்கலாம் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

From around the web