திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள்... தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்!!

 
Annamalai

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வெளியாகின. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே அச்சம் உண்டானதால் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புவதாக தகவல் வெளியாகின. ஆனால், தாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடவே செல்வதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். வடமாநில தொழிலாளர் தோழர்கள் அச்சப்பட வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

வட மாநிலத் தொழிலாளா்கள் குறித்து வதந்தி பரப்புபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடா்பாக விசாரிக்க தனிப் படையினா் பீகாா் விரைந்திருக்கின்றனா்.

North indians

இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியதாகவும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்ததாகவும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

From around the web