என்னால் யாருக்கும் பிரச்சனை வராது... என்ன சொல்ல வருகிறார் அண்ணாமலை?

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு மறுபக்கம் செங்கோட்டையனை டெல்லி அழைத்துப் பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா. மேலும் செங்கோட்டையனுக்கு நடிகர் விஜய் க்கு கொடுக்கப்பட்டதைப் போல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் டீல் முடியவில்லை என்றால் செங்கோட்டையனை வைத்து அதிமுகவை கைப்பற்ற திட்டம் போட்டுள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை சந்திப்புகளை முடித்து விட்டு கோவை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இனி பேட்டி தரப்போவதில்லை என்ற அவருடைய சபதத்தை அவரே முறியடித்துப் பேசியுள்ளார் அண்ணாமலை.
“வருங்காலத்தில் என்னைப் பார்ப்பீங்க. எதையும் மாற்றிப் பேசுபவன் இந்த அண்ணாமலை அல்ல. 2020ம் ஆண்டு ஆகஸ்டு 25 ம் தேதி எதற்காக அரசியலுக்கு வந்தேனோ அந்த வெறியும் அந்தப் பசியும் அந்த நெருப்பும் உள்ளே எரிந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கட்சி முதன்மையானது.கட்சியில் நான் ஒரு தொண்டன்.
இந்தியாவுடைய அரசியல் சரித்திரத்தில் பாஜக நிறைய முடிவுகள் எடுத்துள்ளது.எல்லா முடிவுகளும் ஒரு தொலைநோக்குப் பார்வையோடு தான் எடுக்கப்பட்டுள்ளது. நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் யாருக்கும் பிரச்சனை வராது. அதே நேரத்தில் மாத்தி மாத்தி பேசுறவன் அண்ணாமலை கிடையாது. என்னுடைய நிலைப்பாடு எப்போதுமே ஒன்று தான். தமிழ்நாடு முதன்மையா இருக்கனும் பாஜகவின் வளர்ச்சி இருக்கனும். அதில் என்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியோ இன்னொருவருடைய வளர்ச்சியோ முக்கியம் கிடையாது” என்று பேசியுள்ளார் அண்ணாமலை.
மாத்தி மாத்தி பேசுபவன் இந்த அண்ணாமலை கிடையாது என்பதை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முன்பு அண்ணாமலை பேசியதுடன் நினைவு படுத்திக் கூறுகிறார்கள். அதிமுக கூட்டணியை உறுதி செய்துவிட்டு கட்சியாக புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் யாரென்று அறிவிக்குமா? அல்லது அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? என்பது தான் இப்போது தமிழ்நாடு பாஜகவினரிடையேயும் அதிமுகவினரிடையேயும் பேச்சாக உள்ளது.