எனக்கு சிரிப்புதான் வந்தது.. உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
MKS

தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சிலர் கூறும்போது சிரிப்புதான் வந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை 3ம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெற்று இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நடன நிகழ்ச்சிகள் அரங்கேறின.

MKS

இந்த நிலையில், இன்று அயலகத் தமிழர் நாள் விழாவில் கலந்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எனது கிராமம்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 8 அயலக தமிழர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருப்பதாகக் கூறினார். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள், கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள், தமிழோடு இணைந்திருங்கள் என முதலமைச்சர் வலியுறுத்தினார்.

MKS

தனக்கு உடல்நிலை சரி இல்லை, உற்சாகம் இல்லை என ஒரு பத்திரிகையில் எழுதி இருப்பதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை படிக்கும்போது தனக்கு சிரிப்புதான் வந்ததாக தெரிவித்தார். “எனக்கு என்ன குறை? தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது. அதைவிட எனக்கு என்ன வேண்டும்? மக்களைப் பற்றிதான் எப்போதும் என்னுடைய நினைப்பு இருக்கும். என்னைப்பற்றி நினைத்ததில்லை மக்களின் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு உற்சாக மருந்து” என்றும் கூறினார்.

From around the web