சாலை விபத்தில் காதல் கணவன் பலி... கதறி அழுதபடியே கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை!

 
Musiri

முசிறி அருகே சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வடக்கு அயித்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (34). விவசாயியான இவர் கலா (27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சிலம்பரசன், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் குபேந்திரன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வடக்கு அயித்தாம்பட்டியில் இருந்து நான்காவது மைலுக்கு சென்றார்.

முசிறி - துறையூர் சாலையில் நான்காவது மைல் அருகே வந்தபோது துறையூரில் இருந்து குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன் (56) என்பவர் ஓட்டி வந்த ஆம்னி கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிலம்பரசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead-body

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி, சிலம்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் கணவர் இறந்த தகவல் அறிந்து சிலம்பரசனின் மனைவி கலா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

வீட்டுக்கு சென்ற பின்னர் துக்கம் தாளாமல் கதறி அழுதுகொண்டே இருந்தார். திடீரென்று அவர் ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்து விட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை மீட்க முயன்றனர். பின்னர் இது குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

Musiri PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீ தடுப்பு நிலைய அதிகாரி கர்ணன் தலைமையில் சென்ற குழுவினர் கிணற்றில் இறங்கி கலாவை சடலமாக மீட்டனர். பின்பு கலாவின் உடலும் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாலை விபத்தில் கணவன் இழந்த துக்கம் தாளாமல் மனைவியும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் வடக்கு அயித்தாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது.

From around the web