மறைந்த மனைவிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவர்.. ஊரே திரண்டு வழிபாடு நடத்திய நெகிழ்ச்சி சம்பவம்!

 
Ariyalur

அரியலூர் அருகே மறைந்த மனைவியின் நினைவிடத்தில் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் (42). இவர் திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி கற்பகவல்லி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், பத்தாண்டுகளாக குழந்தை இல்லாமல் இந்த தம்பதி தவித்து வந்தனர். இவர்களுக்கு தற்போது 5 வயதில் கோமகன் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கற்பகவல்லிக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆசை மனைவியை காப்பாற்றுவதற்காக கோபாலகிருஷ்ணன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தார். பல லட்சம் ரூபாய் செலவு செய்தும், மருத்துவர்கள் ஒரு கட்டத்தில் கை விரித்து விட்டனர்.

Ariyalur

இதனால் வேதனை அடைந்து கோபாலகிருஷ்ணன் சோர்ந்துபோனாலும், போராடுவதை விடவில்லை. தனக்காக கணவர் படும் வேதனையை அறிந்த கற்பகவல்லி ஒரு தருணத்தில் இனிமேல் எனக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம், விட்டு விடுங்கள் என்றார். இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி கற்பகவல்லி உயிரிழந்தார்.

மனைவி இறந்த துக்கத்திலும், மீளா துயரத்திலும் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை அடக்கம் செய்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தபோது, மனைவி கற்பகவல்லியிடம் அவர் உயிரிழந்தாலும், கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவேன் என கோபாலகிருஷ்ணன் சத்தியம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

Ariyalur

அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோபாலகிருஷ்ணனும் தன் மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவருக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் செலவில் கோவில் ஒன்றை கட்டி, அதில் 3 அடி உயரத்தில் கற்பகவல்லியை அம்மன் உருவத்தில் சிலை செய்து வைத்து நேற்று கும்பாபிஷேகம் நடத்தினார்.

இதில் கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இது குறித்த தகவல் பரவியதும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டு, கோவிலில் வழிபாடு நடத்தினர். மனைவியிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக கோயில் கட்டிய கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web