மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.. ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்த மகள்.. ஆம்புலன்ஸை கட்டி பிடித்து கதறல்!

 
Thiruvadanai

திருவாடானை அருகே விபத்தில் உயிரிழந்த மகனின் காப்பீடு பணத்தை தர மறுத்த மனைவியை, கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள சின்னக்கீரமங்கலம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவர் குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாதேவி (40) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். கடந்த ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் இவரது மகன் லோகநாதன் உயிரிழந்தார். இதற்காக வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகை மகாதேவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Murder

இந்தப் பணத்தைத் தருமாறு கேட்டு குமாா் அவரது மனைவியைத் தொந்தரவு செய்து வந்தாா். ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால், மனைவி மீது குமார் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் திருச்சியில் இருந்து சொந்த ஊர் வந்துள்ளார். நேற்று இரு மகள்களும் பள்ளிக்குச் சென்ற நிலையில், வங்கியில் உள்ள காப்பீட்டு பணம் கேட்டு குமார் மனைவியிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவர், மகாதேவியின் தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாா். இதையடுத்து, குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். அப்போது, அங்கு எழுந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது மகாதேவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

Thiruvadanai PS

உடனடியாக இதுகுறித்து திருவாடானை போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது, பள்ளி முடித்து வீடு திரும்பிய மகாதேவியின் இளைய மகள், தாய் இறந்து போனதைக் கண்டு கதறி அழுதார். இதனைக் கண்ட அந்த ஊர் மக்கள் கலங்கிப்போயினர்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவாடானை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web