சென்னையில் பிரமாண்ட தீம் பார்க்.. 100 ஏக்கரில் தமிழ்நாடு அரசின் பலே திட்டம்!

 
Disney Land

தமிழ்நாடு அரசு சென்னையின் புறநகரில் பெரிய அளவிலான தீம் பார்க் ஒன்றை தொடங்க உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தீம் பார்க் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை நாட்களை கொண்டாட முதலில் தேடுவது மிகச்சிறந்த தீம் பார்க்குகள் தான். சென்னையில் தனியார் சார்பில் பல தீம் பார்க்குகள் உள்ளன. ஒரு நபருக்கு 500 முதல் 1000 வரை செலவாகும். சாமானிய மக்களால் தீம் பார்க் உள்ளே சென்று சுற்றிப்பார்க்க முடியாது. ஏழை எளிய மக்களின் பொழுது போக்கு சென்னையில் உள்ள கடற்கரைகள்தான். சென்னை புறநகர் பகுதிகளில் பொழுது போக்கு பூங்காக்கள் அதிகம் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்ற சர்வதேச அளவில் சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பரப்பில் தமிழ்நாடு சுற்றுலா துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலா தலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023’ ஐ வெளியிட்டார். 

Disney Land

சுற்றுலாத் துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலாவணியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலை மற்றும் வனப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய பெரும் வாய்ப்புகள் அடங்கிய சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் குறிப்பிடத்தக்க இயக்கியாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. திறமையான தொழில் வல்லுநர்கள், உள்ளூர் கைவினைஞர்கள், வழிகாட்டிகள், சிறிய அளவிலான தொழில்முனைவோர் என பரந்த அளவிலான திறன்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறனை சுற்றுலாத்துறை கொண்டுள்ளது.

ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு ஏற்ற இடமாக தமிழகத்தை உயர்த்துவதையும், சுற்றுலாப் பயணிகளின் தங்கும் காலத்தை அதிகரிப்பதையும், அன்னிய செலாவணியை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான வசதிகளை, கட்டமைப்புகளை அதிகப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வலுவான அடித்தளத்தையும், மாறிவரும் காலங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்றவாறு முன்னேறும் அணுகுமுறையையும் உறுதி செய்யும் வகையில் ஆராய்ச்சி மற்றும் விரிவான ஆய்வின் அடிப்படையில் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை சார்ந்த நிபுணர்கள், சுற்றுலாத் தொழிலில் பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் பங்குதாரர்கள் மற்றும் சுற்றுலா வல்லுநர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023ன் சிறப்பம்சங்கள்: தொழில் அந்தஸ்து: இந்தக் கொள்கையானது சுற்றுலாத் திட்டங்களுக்கு தொழில் அந்தஸ்தை வழங்குகிறது, இதன்மூலம் இதுவரை தொழில்துறை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதே பலன்களை சுற்றுலாத் துறைக்கும் விரிவுபடுத்தி, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வரும் பல்வேறு நிலையிலான பங்குதாரர்களின் நீண்டகால கோரிக்கையை சுற்றுலா கொள்கை பூர்த்தி செய்கிறது.

Disney

முன்னுரிமை சுற்றுலா பிரிவுகள்: சாகச சுற்றுலா, பொழுதுபோக்கு சுற்றுலா, கேரவன் சுற்றுலா, கிராமப்புற மற்றும் தோட்ட சுற்றுலா, கடலோர சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா மற்றும் திரைப்படச் சுற்றுலா ஆகிய 12 முன்னுரிமை சுற்றுலாப் பிரிவுகளின் வளர்ச்சியினை நோக்கமாக கொண்டுள்ளது. நிலைப்படுத்தப்பட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள் அளிக்கப்படும். அனைத்து தகுதியான சுற்றுலா திட்டங்களுக்கும் ஒற்றை சாளர அனுமதியுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறை மேற்கொள்ளப்படும்.

தனியார் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக முக்கிய கவனம் செலுத்தும் அடிப்படையில் பொழுதுபோக்கு பூங்காக்கள், பாரம்பரிய ஹோட்டல்கள், அனுபவமிக்க ஓய்வு விடுதிகள், சுற்றுச்சூழல்-குடிசைகள், முகாம்கள், ரோப்வேகன்கள், ஆரோக்கிய ஓய்வு விடுதிகள், ஓசியானேரியம், மீன்வளம், கோல்ஃப் மைதானம், தோட்டம், பண்ணை சுற்றுலா திட்டங்கள், அருங்காட்சியகங்கள், சாகச சுற்றுலா திட்டம், குரூஸ் சுற்றுலா திட்டம் மற்றும் கேரவன் சுற்றுலா திட்டம் ஆகிய 13 தகுதியான சுற்றுலாத் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. தனியார் பங்களிப்புடன் ஐந்து ஆண்டுகளில் தீம் பார்க் திட்டம் செயல்படுத்தப்படும். அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்ட் தீம் பார்க் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோ போன்று தீம் பார்க் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுற்றுலா கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web