எப்படி சீனியர்களை மிஞ்சி முதல்வர் ஆனாரு..? பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

 
Udhayanidhi - EPS

பல சீனியர்களைத் தாண்டி, கூவத்தூரில் எடப்பாடி பழனிசாமி முதல்வரானது எப்படி என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அண்மையில் சென்னையில் கனமழை பெய்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரினார். அதற்கு துணை முதல்வர் உதயநிதி, இப்போது மழைநீர் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் எனக் கூறினார்.

அதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே திமுக முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது.” என விமர்சித்திருந்தார்.

EPS

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எனக்கு அரசியலில் அனுபவம் கிடையாது என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முழு சுதந்திரமும் அவருக்கு உண்டு. ஏற்கெனவே நான் பொறுப்பேற்கும் பொழுது வந்த விமர்சனத்தை வரவேற்கிறேன் என தெரிவித்திருந்தேன். எடப்பாடி பழனிசாமி என்னை விட அரசியலில் அனுபவம் உடையவர்தான், நான் அதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நான் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவினருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தபோது, யார் அடுத்த முதலமைச்சர் என்ற கேள்வி வந்தபோது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட அதிக சீனியர்கள் இருந்தனர். குறிப்பாக அமைச்சராக இருந்த செங்கோட்டையன்தான் அடுத்த முதலமைச்சராக வருவார் என கூறினார்கள்.

Udhayanidhi

அதேபோல், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தபோது அவர்களை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சரானார்? கூவத்தூரில் நடந்த கூத்து என்ன? என்பதெல்லாம் தொலைக்காட்சியில் மக்களுக்கு தெரியும். எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றவர்களை விமர்சனம் செய்யும் முன்பு எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை நினைத்துப் பார்த்துவிட்டு மற்றவரை விமர்சனம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.

திமுக தலைவர் எனக்கு கொடுத்துள்ளது பதவி கிடையாது கூடுதல் பொறுப்பு. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சியை நான்கு ஆண்டுகள் நடத்த வேண்டும் என்பதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பதவியை பங்கு போட்டுக் கொண்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

From around the web