அதெல்லாம் பார்த்தா எப்படி கூட்டணி வைக்க முடியும்.. அதிமுகவின் திடீர் பல்டி?

நேற்று டெல்லியில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா வை அதிமுகபொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்த பிறகு பாஜக கூட்டணி குறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசிய பழைய வீடியோக்கள் சமூகத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமியிடம் டெல்லியில் செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழ்நாட்டிலுள்ள பிரச்சனைகளை ஒன்றிய அமைச்சரிடம் சொன்னோம். மக்கள் நலன்களுக்காகத்தான் அமைச்சரை சந்தித்தோம் என்று போதைப்பொருள், டாஸ்மாக் ஊழல் என்று என்னன்னமோ அடுக்கினார. ஆனால் தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை குறித்து பேசினேன் என்றும் மட்டும் சொல்லவே இல்லை. அந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்த கட்சி தான் அதிமுக.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், கடந்த காலங்களில் அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை கடுமையாக சாடியுள்ளாரே அண்ணாமலை. அப்படி இருக்கும் போது பாஜகவுடன் கூட்டணி அமைவது சாத்தியம் தானா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“கடந்த கால அரசியலை எல்லாம் பேசிக்கொண்டு இருந்தால் எந்தக் கட்சியும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாது” என்று தடாலடியாகப் பதிலளித்துள்ளார் நத்தம் விஸ்வநாதன். ஆக, கூட்டணி முடிவாகிவிட்டது.. எப்போது அறிவிக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் கட்சியை தவிர்த்து பிற எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி திமுக கூட்டணிக்கு வலுவான போட்டியைக் காட்டுவதற்கு அதிமுகவும் பாஜகவும் ஒரே அணியில் திரள்வது தான் திட்டம் எனத் தெரிகிறது.