அதெப்படி டாஸ்மாக் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம்? அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

தனிப்பட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தாமல் ஒட்டு மொத்தமாக டாஸ்மாக் நிறுவனத்தை எப்படி விசாரிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். டாஸ்மாக் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் மீது ஊழல் குற்றம் சாட்டி சோதனைகள் நடத்தி வரும் அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளார் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்.
அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடுஅரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து டாஸ்மாக் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
அமலாக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது என்றும் வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டிய உச்ச நீதிமன்றம், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் எப்படி விசாரிக்கலாம் என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், அமலாக்கத்துறையின் செயல், எல்லா வகையிலும் எல்லை தாண்டி சென்றுள்ளது. அது கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் செயலாகும் . மூல வழக்கு குறித்த தெளிவில்லாமல் அமலாக்கத்துறை எந்த வழக்கின் மீது விசாரணை நடத்துகிறது? என்று சரமாரியான குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத்துறை மீது சுமத்தியுள்ளது உச்சநீதிமன்றம்.