எலும்புக் கூடுகளாக மாறிய வீடுகள்.. வீடு இருந்தும் வீதியில் வாழும் மக்கள்!

 
Dindigul

திண்டுக்கல் அருகே திண்டுக்கல் அருகே அரசின் காலனி வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிப்பதால், பொதுமக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் தீத்தாம்பட்டி காலனி வீடுகளின் மேற்கூரை பெயர்ந்து எலும்புக் கூடுகளாக காட்சியளிப்பதால், பொதுமக்கள் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் 40 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. தற்போது 120 குடும்பங்களாக பெருகிவிட்ட நிலையில், முற்றிலும் சேதம் அடைந்த வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

floor

வீட்டின் சீலிங்கில் சிமெண்ட் காரைகள் விழுந்து கம்பிகள் தெரியும் அளவுக்கு காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுமோ என்ற அச்சத்துடன் காலனி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால், வீட்டு வாசல் முன்பு குடிசைகள், தார்பாய்கள் அமைத்து வாழும் இவர்கள், வீடு இருந்தும் வீதி தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழை காலங்களில், இந்த வீட்டின் நிலைமையை சொல்லி தெரிய தேவையே இல்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மின்கசிவு ஏற்படுவதுடன் அடிக்கடி மின்தடையும் நிகழ்கிறது. இதனால் குழந்தைகளுடன் இருளிலேயே இரவை கடக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதேபோன்று காலனியில் முறையான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதிகளும் இல்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காலனி பெண் ஒருவர் கூறுகையில், வெயில் மற்றும் மழையால் எப்ப இடிந்து விழும் என்று தெரியாத நிலையில் இருக்கிறோம். குழந்தைகளை வைத்துக்கொண்டு வீட்டில் படுத்து தூங்கவே பயமாக இருக்கிறது. பகல் நேரத்தில் வீட்டிற்குள் போகுவதற்கே பயமா இருக்கு. வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து வெறும் கம்பிகள் மட்டும் தான் இருக்கு என்று கூறினார்.

From around the web