குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 ! பட்ஜெட்டில் அறிவிப்போம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

 
MKS

மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ம் தேதி காலமானார். அதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் முடிவடைகிறது.

அந்த வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர், பெரிய வலசு, சக்தி ரோடு, மஜித் வீதி, காந்திசிலை ஆகிய இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான காரணத்தை கூறினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா திடீரென்று அகலா மரணமடைந்து விட்டார். இந்த தொகுதியில் உள்ள மக்கள் எல்லாம் வேதனையடைந்தனர். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது.

MKS

தந்தை இழந்து அந்த இடத்தை நிரப்ப மகன் வருவார். மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைத் தரவேண்டும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நிறைவேற்றி தருவோம் என்று வாக்களித்தீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது.

ஆதாரங்களுடன் திமுக செய்த சாதனைகளை பட்டியலிடுகிறேன். காலை உணவுத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. கோரிக்கைகள் வைக்காமலேயே இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது. திமுகவின் சாதனைப்பட்டியல் மிக நீண்டது. உலக அளவில் செஸ் வீரர்கள் பெருமைப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டது.

என் உயிரோடு கலந்தது ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான் என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே முதல்வராக வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்று போராடி வருகிறோம் அதிலும் வெற்றி பெறுவோம். எத்தனையோ அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. 

MKS

எதிர்கட்சி தலைவருக்கு கண் தெரியாவிட்டால் நல்ல கண் டாக்டரை பார்த்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப்போட்டு பார்க்கட்டும். இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதற்குள் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். இன்னொரு முக்கியமான வாக்குறுதி இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்.

அதிமுக ஆட்சி காலத்தில் கஜானாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம். வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

From around the web