வீடு ஒதுக்கீடு.. தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி.. பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை நெகிழ்ச்சி!

 
chinnapillai

தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பத்மஸ்ரீ விருதாளர் சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் அழகர்கோயில் செல்லும் சாலையில் அப்பன்திருப்பதிக்கு அருகே அமைந்துள்ள பில்லுசேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. இந்தப் பகுதி மக்களின் வேளாண் பணிகளில் கொத்துத் தலைவியாக பெ.சின்னப்பிள்ளை செயல்பட்டு, களஞ்சியம் சுயஉதவிக்குழுக்களின் வாயிலாக அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கையால் ‘ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் - மாதா ஜீஜாபாய்’ எனும் விருதைப் பெற்றதுடன், வாஜ்பாயே மகிழ்ந்து சின்னப்பிளையின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்துப் பெற்றார். அதன்பின் அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி பொற்கிழி விருதும், 2018-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி கையால் ஔவையார் விருதும், 2019-ம் ஆண்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருதும் பெற்றார்.

chinnapillai

இந்த நிலையில் தனக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து பட்டா வழங்கப்பட்ட நிலையில் இதுவரை வீடு கட்டித் தரப்படவில்லை என்றும், இதனால் மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது என அவர் அளித்த பேட்டி வெளியானது.

இதனை அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னப்பிள்ளைக்கு ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கிட உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சின்னப்பிள்ளைக்கு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும் 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் சின்னப்பிள்ளைக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

chinnapillai

இதுகுறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், “எனக்கு என்று சொந்தவீடு எதுவும் கிடையாது. தற்போது என்னுடைய மூத்த மகன் சின்னத்தம்பிக்கு சொந்தமான இந்த வீட்டில்தான் வசித்து வருகிறேன். மிகவும் சிரமமான சூழலில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு ரொம்ப நன்றி” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

From around the web