இருவேறு இடங்களில் நடந்த கொடூர விபத்து.. 6 பேர் பலியான சோகம்!
நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ்(27). மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினாபேரியை சேர்ந்தவர்கள் மாலை ராஜா மற்றும் சண்முகவேல். இவர்கள் மூவரும் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு நாங்குநேரி பகுதியில் உணவு அருந்திவிட்டு மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் நெடுங்குளம் நோக்கி பயணித்துள்ளனர். அப்போது நாங்குநேரி அருகே உள்ள தாளைகுளத்தில் நான்கு வழி சாலையை கடக்க முயன்ற பொழுது திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் மகேஷ் மற்றும் மாலை ராஜா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சண்முகவேல் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சண்முகவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த மாலை ராஜா மற்றும் சண்முகவேல் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அணலை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுசீலா (60). இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் சரவணன் (38), அதே தெருவை சேர்ந்த அரவிந்தன் (34) என்பவரது ஆட்டோவில் பேட்டவாய்த்தலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பேட்டவாய்த்தலை சக்திநகர் அருகே வந்தபோது எதிரே காரைக்காலில் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி அருகில் உள்ள அய்யன்வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சுசீலா, அவரது மகன் சரவணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அரவிந்தன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.