தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
Leave

தீபாவளிக்கு மறுநாளான 13-ம் தேதி பொதுவிடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வாங்குவது, புத்தாடைகள் வாங்குவது என மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். அத்துடன், பட்டாசு மற்றும் ஜவுளி கடைகளிலும் விற்பனை களைகட்டி வருகிறது. 

இது ஒருபுறமிருக்க, ஞாயிற்றுக் கிழமை தீபாவளி வருவதால், சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது.

Diwali

சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை பயணத்தை தொடங்கினாலும், தீபாவளி தினமான ஞாயிறுக் கிழமை இரவே மீண்டும் கிளம்பினால் மட்டுமே மறுநாள் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வர முடியும். 

பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரெயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கள் கிழமை அன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறிவந்தனர்.

TN-Govt

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

From around the web