தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. இந்த மாவட்டங்களில் எல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பல இடங்களில் தொடர்ந்து மிக கனமழை பெய்து வருகிறது. தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 7 மணி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.