தொடரும் கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் 50 முதல் 95 சென்டி மீட்டர் வரை கனமழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுவரை 7,500 பேர் 84 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா கூறியுள்ளார்.
இந்த கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை (19-12-2023) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.