கனமழை அலெர்ட்... அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம். திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 14) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இரண்டு தாலுக்காகளுக்கு மட்டும் (கந்தர்வக்கோட்டை, கரம்பக்குடி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.