தேவாலயத்தில் மனமுருகி பிரார்த்தனை.. உண்டியலில் இருந்த பணத்தை ஆட்டைய போட்ட நபர்.. வைரல் வீடியோ!

 
Dindigul

திண்டுக்கல் அருகே தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை செய்ய வந்த நபர், உண்டியலில் இருந்து பணத்தைத் திருடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி பகுதியில் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வருகை தந்து பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். அப்படி வருபவர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கையும் செலுத்துகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த உண்டியலில் மக்கள் செலுத்திய காணிக்கை பணம் மாயமானது தேவாலய நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து தேவாலயத்திற்குள் சிசிடிவி கேமராக்களை அமைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதி பதிவான சிசிடிவி காட்சிகளை தேவாலய நிர்வாகிகள் நேற்று ஓடவிட்டுப் பார்த்தனர். அப்போது, லுங்கி, டி- ஷர்ட்டில் தேவாலத்துக்குள் வரும் நபர் ஒருவர் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துள்ளார்.

Dindigul

பின்னர் ஏசுநாதர் சிலை முன்பு மண்டியிட்டு மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். இதன் பிறகு தேவாலயத்திற்குள் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அங்குள்ள உண்டியலில் இருந்து பணத்தை எடுத்து தனது சட்டை பாக்கெட்டுக்குள் திணித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் பெண்மணி ஒருவர் தேவாலயத்திற்குள் வருவதை கண்டதும், அவர் மீண்டும் பிரார்த்தனை செய்வது போல் நடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை கண்ட தேவாலய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


இதையடுத்து இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் தேவாலய நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தேவாலயத்தில் ஏசுநாதரிடம் வேண்டிக் கொண்டு உண்டியல் காணிக்கையை திருடும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

From around the web