தமிழ்நாட்டு மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. இந்தமுறை பொங்கல் பரிசாக ரூ. 2,000.. அரசு ஆலோசனை!

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.
கடந்த 2021-ல் அதிமுக ஆட்சியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கம் 2,500 ரூபாய் மற்றும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஜனவரியில் பொங்கல் தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தகுதி வாய்ந்த அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன், 1,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், விரைவில் பொங்கல் பண்டிகை வரப்போகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் பேசிய அவர், “மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படாமல் இருப்பதால் அது குறித்த அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் வர இருக்கும் நிலையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000-க்கு பதிலாக ரூ.2,000 வழங்கலாமா என அரசு பரிசீலித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.