உலகத் தாய்மொழி நாள்!! பிழைக்க வருபவர்களிடம் எந்த மொழியில் பேச வேண்டும்?

 
World Mother language day

இன்று உலக தாய்மொழி நாள். உலகம் முழுவதும் பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளை மட்டுமல்ல, பேசாமல் வழக்கொழிந்து போன மொழிகளையும் நினைவு கூர்ந்து போற்றும் ஒரு நாள்.

இன்று உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழி ஆங்கிலம் என்று உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் ஆங்கிலம் மிகவும் குறைவான மக்களால் பேசப்பட்ட ஒரு சிறுபான்மை மொழி என்றால் நம்புவீர்களா!

ஆங்கில காலனித்துவம் உலகம் முழுவதும் இருந்த எண்ணற்ற பூர்வக்குடி மக்கள் மொழிகள் அழியக் காரணமாக இருந்து, ஆங்கில மொழி வளர காரணமாக இருந்தது. இதற்கு அடுத்த நிலையில் பிரெஞ்சு மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் காலனித்துவத்தால் பரவலாக பரவிய மொழிகள் ஆகும்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ப்ரேசில் நாட்டைத் தவிர ஏனைய நாடுகளின் பூர்வகுடி மொழிகள் அழிந்து ஸ்பானிஷ் மொழி மக்களின் மொழியாகிவிட்டது. ப்ரேசில் நாட்டை தன் வயமாக்கிக் கொண்டது போர்ச்சிக்கீசிய மொழி.

World Mother language day

அதே வேளையில் ஆங்கில காலனியாக இருந்த இந்தியாவில் ஆங்கிலம் அறிமுகமாகினாலும் எண்ணற்ற தாய்மொழிகள் இன்னமும் வளமுடன் வழக்கில் உள்ளது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் படி ஒன்றிய மாநில அரசின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் இருந்து வருகிறது.

ஒரு மொழி என்பது வீட்டு மொழி, வணிக மொழி, கல்வி மொழி என்று மூன்று வகைகளாக பயன்பட்டு வருகிறது. பொதுவாக தாய்மொழி தான் வீட்டு மொழியாக வழக்கத்தில் இருக்கும். தாய்மொழியில் கல்வி இருந்து விட்டால் அந்த மொழி மென்மேலும் செழுமை அடையும். வணிக மொழியும் தாய்மொழியில் இருந்து விட்டால் எந்த சூழலிலும் அந்த மொழி நீடித்து நிலைத்து நிற்கும்.

ஆங்கிலத்தைத் தவிர சீன, ஜப்பானிய, கொரிய. ஸ்பானிஷ், ஃப்ரெஞ்சு  மொழி பேசுபவர்களுக்கு வீட்டு, வணிக மற்றும் கல்வி மொழியாக அந்ததந்த மொழிகள் பயன்பட்டு வருகிறது.

கல்லூரி வரையிலும் தமிழ் வழிக் கல்வி தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள போதிலும், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றிற்கு நாம் ஆங்கில மொழியையே நம்பி உள்ளோம். ஒரு வகையில் ஆங்கிலம் நமது கல்வி மொழி ஆகிவிட்டது.

இது வரையிலும் தமிழ்நாட்டில் தமிழ் தான் வணிக  மொழியாக இருந்து வந்த போதிலும், அதை நோக்கிய ஆபத்துகள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து இருந்து வருகிறது. கலைஞர் இயற்றிய வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகை என்பது வெறும் சட்டம் அல்ல. அதன் பின்னால் ஆழமான வணிகமொழி என்ற காரணம் இருக்கிறது.

தற்போது ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு பெரும்பாலனான நிறுவனங்களின் ரசீது (பில்) ஆங்கில மொழியிலேயே இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது.

World Mother language day

மனித வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பொருள் தேடி இடம் பெயர்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது. சங்க இலக்கியத்தில் தலைவன் பொருள் தேடி வேறிடம் சென்ற நேரத்தில் தலைவன் – தலைவி பிரிவு பற்றிய பாடல்கள் ஏராளம் உள்ளதே இடம் பெயர்வுகளுக்கு பெரும் சான்றாக விளங்குகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மும்பை, பெங்களூரு, டில்லி, என வெளிமாநிலங்களுக்கு உடல் உழைப்பை மட்டுமே நம்பி இடம் பெயர்ந்தவர்கள் ஏராளம்.

இன்று அதே போல் உடல் உழைப்பை நம்பி வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டின் சிறு நகரங்கள் நோக்கியும் எண்ணற்ற பிற மொழியினர் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் இந்தி மொழி பேசுபவர்களாகவும் இருக்கிறார்கள். சிறு வணிக நிறுவனங்கள் பலவற்றிலும் இவர்களின் உடல் உழைப்பு தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் பணிபுரியும் உணவகம் உள்ளிட்ட நிறுவனங்களிலும், அவர்களின்  அத்தியாவசிய தேவைகளுக்காக சந்தை, போக்குவரத்து  உள்பட அனைத்து பொது இடங்களிலும் தமிழர்கள் அவர்களுடன் உரையாட  வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்துள்ள பிற மொழிக்காரர்களிடன் பரிவுடன் இருக்க வேண்டியது மனிதநேயம் என்றாலும். அவர்களுக்காக அவர்களுடைய மொழியை நாம் கற்றுக் கொள்ள வேண்டுமா அல்லது அவர்கள் நம்முடைய தமிழ் மொழியை கற்றுக் கொள்ள வேண்டுமா என்பது தற்போது தலையாய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்த பிற மொழியினரிடம் நாம் அவர்களின் மொழியில் பேசுவது, அவர்களுடைய இந்தி மொழியை நம்முடைய வணிகமொழியாக்கும் முயற்சிக்கு துணை போகிறது. ஏற்கனவே ஒன்றிய அரசும் பெரு வணிக நிறுவனங்களும் இந்தி மொழியை வணிக மற்றும் அலுவல் மொழியாக திணிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிற மொழிக்காரர்களிடம் அவர்க்கள் மொழியிலேயே உரையாடத் தொடங்கினால் தமிழ் மொழி வணிக மொழியாக இல்லாமல் போய்விடும்.

“வணிக மொழியும் கல்வி மொழியும் நம்முடைய தாய் மொழியாக இல்லாமல் போனால் வீட்டு மொழியான தாய்மொழி அழியும்” என்பது வழக்கொழிந்து போன உலக மொழிகள் கற்றுத்தந்துள்ள பாடம்.

பிழைக்க வருபவர்கள் நம்முடைய மொழியை கற்றுக் கொள்ளட்டும். இதற்காக அரசு கூட ஒரு திட்டம் தீட்டலாம். பிழைக்கப்போன தமிழர்கள் அந்த மொழிகளைக் கற்றுக் கொண்டார்கள் தானே!. 

தமிழ்நாட்டில் தமிழ் மொழி வணிக மொழியாக தொடர்வதற்கு தாய்மொழி நாளில் உறுதி ஏற்போம்!

- தினகர் ரத்னசபாபதி

From around the web