சூப்பர் மார்க்கெட்டில் கைவரிசை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது.. சென்னையில் பரபரப்பு
சென்னையில் சூப்பர் மார்க்கெட்டில் கூட்டாக சென்று கைவரிசை காட்டிய, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொளம்பூர் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்று உள்ளது. கடந்த 15-ம் தேதி 3 பெண்கள் உட்பட 4 பேர் இந்த கடைக்கு வந்துள்ளனர். அவர்கள், ரெகுலர் கஸ்டமர் போன்று கூடைகளை எடுத்துக் கொண்டு அங்கும் இங்குமாக உலாவியுள்ளனர். அப்போது, பாதாம், முத்திரி, ஹார்லிக்ஸ் போன்ற பொருட்களை எடுத்து கூடைக்குள் வைப்பதற்கு பதில், ஆடைக்குள் மறைந்து வைத்தனர். சிசிடிவி கேமரா இருப்பது கூட தெரியாமல் 4 பேரும் கூட்டாக சேர்ந்து அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
அன்றைய தினம் சூப்பர் மார்க்கெட் கணக்கு வழக்கை சரிபார்த்தபோது கணக்கு இடித்துள்ளது. இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குடும்ப களவாணிகளின் திருட்டு அம்பலமாகியுள்ளது. போனால் போகட்டும் என்று சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் இந்த திருட்டு சம்பவத்தை கடந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குடும்ப களவாணிகள் 5 பேர் மீண்டும் அதே சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்துள்ளனர். இதைக் கண்டதும் பொறிவைத்து அவர்களை பிடிக்க சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் மாஸ்டர் பிளான் போட்டுள்ளனர். இதையடுத்து உள்ளே சென்ற 5 பேர் வழக்கம் போல் உலர் திராட்சை, மிளகாய் போன்ற மளிகைப் பொருட்களை சுருட்டியுள்ளனர்.
அதோடு நிறுத்திக் கொள்ளாமல் சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் வைத்திருந்த இரு செல்போன்களையும் திருடியுள்ளனர். திருட்டு பர்சேஸ் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வெளியே வந்த குடும்ப களவாணிகளை, அங்கிருந்த ஊழியர்கள் கையும் களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்தனர். அதில், 18 வயது இளம் பெண் ஒருவர் மட்டும் தப்பியோடியுள்ளார்.
இது குறித்து புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் 4 பேரையும் பிடித்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அம்பத்தூர் சிவானந்த நகரை சேர்ந்த குட்டியம்மாள், செல்வி, சந்தோஷ், சஞ்சய் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே தியாகராய நகரில் உள்ள பிரபல ஷோரூமில் 5 செல்போன்கள் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 செல்போன்கள், 2 இயர்பட்ஸ் மற்றும் மளிகைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், 4 பேரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிரியா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.