பெரும் சோகம்! கேரளா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி!
கேரளா நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 2 பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வயநாடு, சூரல்மலை, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 251-ஐ கடந்துள்ளது. சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட இடங்களில் சேற்றுடன் காட்டாற்று வெள்ளம் அடித்து சென்றதில் 400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலைக்கு சென்றிருந்தார். இந்த சூழலில் சூரல்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல நிலச்சரிவில் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண குமார் உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டம் பந்தலூரை சேர்ந்த ஷிஹாப் என்பவர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளார். சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் ஷிஹாப். பள்ளிவாசல் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஷிஹாப் பலியாகியுள்ளார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஷிஹாப் உடல் பாறை இடுக்கில் மீட்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாண் குமார் ஆகியோர், கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில், நீலகிரி பந்தலூர் பகுதியைச் சேர்ந்த ஷிஹாப் பலியாகியுள்ளார். மேலும், முண்டக்கை மேம்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 தமிழர்கள் உயிரிழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலம்பெயர்ந்து முண்டக்கையில் வசித்து வந்தனர். 11 தமிழர்கள் அங்கு வசித்து வந்த நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலச்சரிவில் அங்கு 30 பேரை காணவில்லை என முண்டக்கை பகுதி மக்கள் கதறி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களின் பாகங்களும் ஆங்காங்கே சிதறி கிடப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.