பெரும் சோகம்.. ரயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் பலி.!

 
chennai

சொந்த ஊருக்கு செல்லும் அவசரத்தில் ரயிலில் இருந்து கீழே இறங்கிய புதுப்பெண், தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள மாத்தூர் அருகே வல்லம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பரசு. இவர் சென்னையில் உள்ள மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியைச் சேர்ந்த ஷீலா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

dead-body

திருமணத்திற்கு பிறகு கணவருடன் வசித்து வந்த ஷீலா சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த 13-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினார். அந்த ரயில் 14-ம் தேதி காலையில் ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமாக ரயில் நிலையத்தில் நிற்காது. ஆனால் அந்த சமயத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் நின்றது.

இதனை கவனித்த ஷீலா ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்கினால் சீக்கிரம் வீட்டுக்கு சென்று விடலாம் என நினைத்து இறங்குவதற்கு ஆயத்தமானார். இந்த நிலையில் சிக்னல் கிடைத்து மீண்டும் ரயில் புறப்பட்டது. உடனே அவசர, அவசரமாக ரயிலில் இருந்து ஷீலா கீழே இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Police

உடனே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் ஷீலாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

From around the web